/> ஈரோடு எனக்கு பிடித்த கோயில்கள்,சுற்றுலா இடங்கள்!! | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 24 June 2011

ஈரோடு எனக்கு பிடித்த கோயில்கள்,சுற்றுலா இடங்கள்!!

இரண்டு ஓடைகள் ஓடிய பகுதி ஈரோடை என அழைக்கப்பட்டு ஈரோடு என மறுவியது..பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த ஊர்... மஞ்சள் தங்கம் போல விளையும் ஊர்..மஞ்சள் நகரம் என புகழ் பெற்றது ஈரோடு..ஜவுளிகளை பொறுத்தவரை இங்குதான் மிக மலிவு..பெங்களூரை விட இங்கு மலிவு..பெரிய கடைகளை விட கனி மார்க்கெட் எனப்படும் சிறு வியாபாரிகளிடம் சேலை..,ரெடிமேடு ரகங்கள் வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள்...இங்கு பேரம் பேசி வாங்கினால்தான் தீபாவளி கொண்டாடின மாதிரி இருக்கும்...
.
பெரிய மாரியம்மன் கோயில்;
ஈரோட்டில் புகழ்பெற்ற கோயில்கள் என்றால் பெரிய மாரியம்மன் கோயில்  ,ஈஸ்வரன் கோயில் போன்றவை..இவை நகரின் மத்தியில் அமைந்துள்ளன..பெரிய மாரியம்மன் கோயில் சொந்தமான இடத்தை ஆங்கிலேயர்கள் முறைகேடாக ஆக்கிரத்து கட்டியதுதான் சி.எஸ்.ஐ சர்ச்.சி.மற்றும் சி.எஸ்.ஐ. ஹாஸ்பிடல்...பெரிய கோயிலாக இருந்த பெரிய மாரியம்மன் ஆலயத்தை இடித்து விட்டு அம்மனை தூக்கி எறிந்து விட்டனர்..அதன் பின்னர் இந்து பக்தர்கள் சிலையை கைப்பற்றி ,சிறிய அளவில் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்..இக்கோயிலுக்கு சொந்தமான இடம் இன்னும் முறைகேடாக கிறித்துவ மிசனரிகள் அனுபவித்து வருகின்றனர்...பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பொம் என முழக்கமிட்டு ஓர் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது..

ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்;


  ஈரோடு.காவேரி கரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது.இந்த பிருந்தாவனத்தை காண பக்தர்கள் கூட்டம் அதிகம் வருகிறது. மந்திராலயத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் எடுத்து வந்து ஈரோடு பிருந்தாவனத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலின் அமைதியும்,சுத்தமும் வேறு எங்கும் வராது..நான் இங்கு போனபோது சட்டை,பனியன் எல்லாம் கழட்டிட்டுத்தான் வரணும் என்றார்கள்..கழட்டி விட்டு உள்ளே சென்று பார்த்தேன்...ராகவேந்திரரை வணங்கி விட்டு சிலர் தியானம் செய்து கொண்டு இருந்தார்கள்..நானும் அமர்ந்தேன்...கண்ணை மூடி இருந்தாலும் சட்டை பாக்கெட்டில் செல்ஃபோனை வைத்து விட்டு வந்துவந்துட்டோமே ஃபோன் வந்தால்? என தோன்றியது..இன்னும் ஒருமுறை போக வேண்டும்....

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்;

 எனக்கு பிடிச்ச இடம்..காவிரி கரை ஓரத்தில் இருக்கும் ஸ்தலம்..பிரம்மா,விஸ்ணு,சிவன் மூவரும் இருக்கும் ஸ்தலம்..அகத்தியர் ,சிவபெருமான் பார்வதி திருமணத்தை தரிசனம் செய்த ஸ்தலம் என்பார்கள்..பிரம்மாவுக்கு சிறப்பான சன்னதி அமையப்பெற்ற ஒரே ஸ்தலம்..அதனால்தான் திங்கள் கிழமை தோறும் 5000 கர்நாடகா பக்தர்கள் பிரம்மாவை வணங்கி செல்கின்றனர்...கர்ம வினை தீர்க்கும் ஸ்தலம்..சனி பகவான் சிவனை பார்த்தபடி அமர்ந்துள்ளார்..சிவன் சுடுகாட்டை பார்த்தபடி அமர்ந்துள்ளார்..காசிக்கு அடுத்து சுடுகாட்டை பார்த்தபடி இருக்கும் ஒரே ஸ்தலம்...

காவிரி இடமிருந்து வலமாக தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இடம்..சனி தன் வாகனத்தில் அமர்ந்த கோலம்...அதாவது காக்கை மேல் அமர்ந்திருப்பார்..காக்கை மீது அமர்ந்திருக்கும் சனிபகவான் வேறு எங்கும் இல்லை...சனி வாகனத்தில் அமர்ந்திருப்பதால்,சனிக்குண்டான தொழில் வாகனம் என்பதால் வாகன தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட சிறப்பு உண்டாகும்..அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...கோயில் மிக பெரிதாக இருக்கிறது...பெருமாள் .,ஸ்ரீரெங்கம் பெருமாள் கோலத்தில் அருள் பாலிக்கிறார்..
.
ஒவ்வொரு தனி சன்னதியும் பெரிய அளவில் தாரளமாக இருக்கும்..தினசரி சுற்றுலா பயணிகள் வருகை இருந்துகொண்டே இருக்கும்...சிவன் சிறிய மலை முகடு போல தோன்றுகிறார்...காரணம் இமயமலையிலிருந்து சிதறிய ஒரு துண்டு தான் இத்தலத்து இறைவன் என்கிறார்கள்....


பவானி கூடுதுறை;

காவிரி,பவானி,அமிர்த நதி மூன்றும் இணையும் நதி கூடலே பவானி கூடுதுறை...இதில் அமிர்த நதி மட்டும் கண்ணுக்கு தெரியாது...சங்கமேஸ்வரர் சன்னதி மூலவர் லிங்கத்தின் அடியில் இருந்து அந்த நதி உற்பத்தி ஆகி கலப்பதாக ஐதீகம்...

கோயிலை சுற்றி அடிக்கு 1008 லிங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக சொல்கிறார்கள் அதனால் செருப்பு அணிந்த படி செல்லக்கூடாதாம்..பவானி,கொடுமுடி இரண்டு ஸ்தலங்களிலும் பரிகாரங்கள்,திதி கொடுப்பது புகழ் பெற்றது....களத்திர தோசம்,நாகதோசம்,பித்ரு தோசம் போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து சாந்தி செய்கிறார்கள்..இங்கு பரிகாரம் செய்து கொண்டால் உடனே பலிக்கும்..இதனால் வெளியூரில் இருந்து எல்லாம் இங்கு வருகிறார்கள்..இந்த தலத்தில் பெருமாள் சன்னதியும் உண்டு..இங்கு திருப்பதி பெருமாள் கோலத்தில் அருள்பாலிக்கிறார்..

பண்ணாரி அம்மன்;

மிக புகழ் பெற்ற சக்தி வாய்ந்த அம்மன் கோயில்.சத்தியமங்கலம் மைசூர் சாலையில் அமைந்துள்ளது..வருடாந்திர குண்டம் திருவிழாவில் துணை கலெக்டர்,போலிஸ் எஸ்.பி உட்பட இரண்டு லட்சம் பேர் குண்டம் இறங்குகிறார்கள்...திருச்சி மாவட்டத்திற்கு சமயபுரம் என்றால் ஈரோடு மாவட்டத்திற்கே காவல் தெய்வம் பண்ணாரி அம்மன்..பலரின் குல தெய்வமாகவும் திகழ்கிறது..சிலருக்கு குல தெய்வம் எது என தெரிய வில்லை என்றால் பண்ணாரி அம்மனையே குலதெய்வமாக நேர்ந்து கொள்கிறார்கள்

. மைசூர் செல்லும் பஸ்,லாரிகள் அனைத்தும் இங்கு நின்று வழிபட்டபின்னரே செல்கின்றன..வீரப்பனும் அடிக்கடி வந்து கொண்டிருந்தானாம்..இங்கிருந்து காட்டுக்குள் ஒரு அம்மன் கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்..பெயர் காட்டு பண்ணாரி.ஆனால் யானை,புலி,கரடி இவற்றிடமிருந்து தப்பித்தால் தரிசனம் செய்து வரலாம்..அந்தளவு திகிலான பயண தரிசனம்..


கொடிவேரி அணை;
கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த அணை.அன்னக்கிளி முதல் பல கிராமத்து பிண்ணனியில் எடுக்கப்பட்ட படங்கள் ஒரு சீனாவது இங்கே எடுத்திருப்பார்கள்.நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாக்காரர்கள் மீண்டும் இந்த இடத்தை தேடி வரத்தொடங்கியுள்ளனர்.சின்ன பட்ஜெட் படங்களுக்கான சொர்க்கம் இது.பவானி சாகர் அணை யிலிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அடுத்த தேக்கம் இது.ஞாயிற்றுக்கிழமை தம்பதிகள் குடும்பத்துடன் வருகிறார்கள் என்றால்,வாரம் முழுக்க காதலர்களின் வேடந்தாங்கலாக திகழ்கிறது.இப்போது பெய்த மழையில் கரை புரண்டு ஓடுகிறது மழை நீர் .மீன் கடைகள் நிறைய இருக்கும்.அருமையான இயற்கை சூழ்நிலை மனதை அள்ளும்.ஈரோட்டுக்காரங்களுக்கு இதுதான் முக்கிய சுற்றுலா தலம்.பட்ஜெட் பயணம் ஆச்சே.
Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner