/> வியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 27 January 2016

வியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்

ஸ்ரீபைரவர் தரிசனம்! - கழுகுமலை


ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்..

இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தா னுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான்.

அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது.
குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும் மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. உள்ளே கருவறையில், இடப்பக்கமாக நிற்கும் மயிலின் மேல், ஒரு முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு, இடது காலை மயிலின் கழுத்தில் வைத்து, வலது காலைத் தொங்கவிட்டபடி வெற்றிவேல் ஏந்திய ஸ்ரீகழுகாசல மூர்த்தியான முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். அருகில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். உத்ஸவர் ஸ்ரீஆறுமுகநயினார் கொள்ளை அழகில் காட்சி தருகிறார்.

இங்கே உள்ள ஸ்ரீபைரவர் வெகு பிரசித்தம். சுமார் 7 அடி உயரத்தில், ஸ்ரீவடுகமூர்த்தியாக, வலது கரத்தில் கபாலம், இடது கரத்தில் கதை எனப்படும் தண்டாயுதத்துடன் சிவப்பரம்பொருளாக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபைரவர்.

ஆடையின்றி, திகம்பரராகக் காட்சி தருவார் ஸ்ரீபைரவர். எட்டுத் திசைகளில் இருந்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஆடைகளாகக் காட்சி தருவதால், இவர் ஆடை அணிவதில்லை என்பர். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால வேளையில் ஸ்ரீபைரவ வழிபாடு ரொம்பவே விசேஷம். அதேபோல், பௌர்ணமி முடிந்த எட்டாம் நாள், தேய்பிறை அஷ்டமியை 'பைரவாஷ்டமி’ என்று சொல்வார்கள். அந்த நாளில் வழிபடுவதும் பிரார்த்திப்பதும் கூடுதல் பலனைத் தரும் என்பது ஐதீகம்!


அன்றைய தினம், ஸ்ரீபைரவருக்கு 21 வகை அபிஷேகங்கள் செய்து, புனுகு சார்த்தி, நெய் தீபமேற்றி, செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, அலங்கரித்து, வடைமாலை சார்த்தி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

ஸ்ரீபைரவருக்கு வடைமாலை சார்த்தி, தயிர்சாதம், காய்கறிகளால் செய்யப்பட்ட கலவை சாதம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; வியாபாரத்தில் வெற்றி உறுதி; பில்லி- சூனிய ஏவல் அனைத்தும் நீங்கி, நிம்மதியாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner